“இந்த கோரிக்கைகளை நம்முடைய திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். இரு அவைகளிலும் புதுச்சேரி மக்களுக்காக திமுக குரல் கொடுக்க வேண்டும்.” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
புதுச்சேரி மக்களுக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக திமுக எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதுச்சேரி திமுகவினர் மனு அளித்துள்ளனர்.
ஸ்டாலினுடன் சந்திப்பு
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில் டெல்லியில் திமுகவின் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், “நாட்டில் நிதி மற்றும் நிர்வாக சுதந்திரம் இல்லாத யூனியன் பிரதேசமாக புதுச்சேரி நீடிக்கிறது. மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு இல்லாததால் மத்திய அரசின் நிதிக் குழுவில் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை. அதே வேளையில் சட்டப்பேரவை இருப்பதால் யூனியன் பிரதேசங்களுக்கு வழக்கப்படும் வரிச்சலுகையும் தருவதில்லை.

புதுச்சேரி அரசின் கடன்
மத்திய அரசு கடனை தள்ளுபடி எதுவும் செய்யாமலேயே தனிக் கணக்கு தொடங்கியதால், புதுச்சேரி மாநில அரசின் கடன் ரூ.10 ஆயிரம் கோடியாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தேர்வாணையம் இல்லாததால் காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் நீடித்துக்கொண்டிருக்கிறது. எனவே, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரியையும் சேர்க்க வேண்டும். அதேபோல மாநில அந்தஸ்து மட்டுமே புதுச்சேரியின் வளர்ச்சிக்கு ஒரே தீர்வாக இருக்கும். அதனால் அதற்கு திமுக குரல் கொடுக்க வேண்டும்.

திமுகதான் குரல் கொடுக்கணும்
புதுச்சேரியில் உள்ள வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆண்டுக் கணக்கில் ஊதியம் இல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களுடைய குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் சீர்தூக்கி பார்த்து, பொதுத்துறை நிறுவனங்களையும், பஞ்சாலைகளையும் புனரமைக்கும் பொருட்டு மத்திய அரசு கூடுதல் நிதியை புதுச்சேரிக்கு வழங்க வேண்டும். இடஒதுக்கீடுடன் புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் வழி செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை நம்முடைய திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். இரு அவைகளிலும் புதுச்சேரி மக்களுக்காக திமுக குரல் கொடுக்க வேண்டும்.” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
