Only RK Chief Election Officer Rajesh Lakhani said that the election will take place.

ஆர்.கே.நகர் தொகுதியில் 17,510 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும் போலி வாக்காளர்களை நீக்கிய பின்னர் தான் ஆர்.கே. நகர் தேர்தல் நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. இதைதொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. 

சசிகலா தரப்பில் ஒரு அணியும் ஒபிஎஸ் தரப்பில் ஒரு அணியும் உருவாகியது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சசிகலா தரப்பில் அவரது பேச்சையும் மீறி துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறங்கினார். 

ஒபிஎஸ் தரப்பில் ஆர்.கே.நகர் தொகுதி மண்ணின் மைந்தனான மதுசூதனன் வேட்பாளராக களமிறங்கினார். 

இதில், இரு தரப்பும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்தனர். இதனால் இரட்டை இலையை முடக்கி வேறொரு சின்னத்தை இரு தரப்புக்கும் கொடுத்தது தேர்தல் ஆணையம். 

இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா கொடுக்கப்படுவதாக ஒபிஎஸ் தரப்பும் எதிர்கட்சியினரும் டிடிவி தரப்பினர் மீது குற்றம் சாட்டின. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. 

அப்போது பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் சிக்கின. இந்நிலையில், ஆர்.கே. நகர் தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து டிசம்பர் இறுதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் 17,510 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும் போலி வாக்காளர்களை நீக்கிய பின்னர் தான் ஆர்.கே. நகர் தேர்தல் நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 

மேலும், போலி வாக்காளர்களை நீக்கும் படி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.