தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 507 அமர்வுகளில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 218 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளன. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் இரண்டாவது சனிக்கிழமைகளில் தேசிய லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்த தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு முடிவு செய்தது. 

 

இந்த வகையில் இந்த ஆண்டின் முதல் மக்கள் நீதிமன்றம் இன்று, தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ள இந்த மக்கள் நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட மையத்தில் தாக்கலான வழக்குகளின் விசாரணை நடைபெறுகிறது. இன்று நடைபெறும் விசாரணையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கேட்பு வழக்குகள், வாரிசு உரிமை கேட்பு வழக்குகள், வங்கி வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், குடும்ப வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களில் பதிவு செய்யாத வழக்குகள் விசாரிக்கப்பட்டு,  உடனடியாக தீர்வு காணப்படுகிறது. 

இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 அமர்வுகள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 4 அமர்வுகள், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 18 அமர்வுகள், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் மற்றும் தாலுக்கா அளவிலான குழுக்களில் 481 அமர்வுகள் என தமிழகம் முழுவதும் 507 அமர்வுகளில் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில் மொத்தம் 1லட்சத்து 71 ஆயிரத்து 817 நிலுவை வழக்குகள் மற்றும் 71 ஆயிரத்து 401பதிவு செய்யப்படாத வழக்குகள் என மொத்தம் 2லட்சத்து 43 ஆயிரத்து 218 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளன.