டாஸ்மாக் கடைகளை திறக்க தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஆன்லைனில் மதுவிற்க பரிசீலித்துள்ளதால் சோமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது சில தளர்வுகள் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல  மாநிலங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என்பதால் சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதனை விசாரித்த நீதிபதிகள் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ஆன்லைன் மது விற்பனை, நேரடி தொடர்பில்லாத விற்பனை உள்ளிட்ட வழிகளை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தி உத்தரவிட்டது. தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே அவற்றை மூடுவதற்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் ஆன்-லைன் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், உணவு விநியோக தொழிலில் உள்ள 'சோமோட்டோ' உள்ளிட்ட நிறுவனங்கள் மது விநியோகத்தில் இறங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.