Asianet News TamilAsianet News Tamil

காவிரி படுகையில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும் - மக்களுடன் இணைந்து போராட டிடிவி தினகரன் தயாராம்...

ongc leave from Cauvery ttv Dinakaran ready to fight with people
ongc leave from Cauvery ttv Dinakaran ready to fight with people
Author
First Published Feb 7, 2018, 8:20 AM IST


தஞ்சாவூர்

காவிரி படுகை பகுதியில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் எங்களின் படையுடன் நாங்களும் மக்களுடன் இணைந்து போராடுவோம் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த நான்கு நாள்கள் நடத்தினார் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அதனைத் தொடர்ந்து நேற்று கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் மக்களை சந்தித்துப் பேசினார்.

அதன்பின்னர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "கதிராமங்கலம் மக்களின் பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக பார்க்க கூடாது.

அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என்றாலும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது. நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் காவிரி படுகையை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுப்போம்.

மண்ணை காக்க போராடிய கதிராமங்கலம் மக்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்.

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. ஆய்வால் பாதிப்பு இல்லை என்றால் அவர்கள் அதை வெளிப்படையாக மறுத்து ஆதாரத்தோடு தெரிவிக்க வேண்டும்.

இங்கு குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி படுகை பகுதியில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். எங்களின் படை பெரியது. நாங்களும் மக்களுடன் இணைந்து போராடுவோம்.

தமிழகத்தில் தற்போது காலாவதியான அரசுதான் நடக்கிறது. எந்த நேரத்திலும் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்.

உயர்கல்வித் துறையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறினார். அதற்காக துடிப்பான அதிகாரியை நியமிக்க கூறியதற்குதான் பழனிசாமி தரப்பினர் எங்களிடம் பிரச்சனையை தொடங்கியது.

தற்போது பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இலஞ்சம் பெற்றுள்ள விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. காவலாளர்கள் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் தேர்தல் வராமல் ஆட்சி மாற்றம் வருமா? என்ற கேட்கிறீர்கள். அதற்கு வாய்ப்புள்ளது. ஆறு பேரை தவிர மற்றவர்கள் வந்தால் வரவேற்போம்.

தற்போதைய ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடைபெறாமலேயே புதிய ஆட்சி அமையும். எம்.எல்.ஏக்கள் யாரும் பதவியை துறக்க விரும்ப மாட்டார்கள். அதனால் இந்த ஆட்சி மாற்றம் விரைவில் நடக்க வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட அந்த ஆறு பேர் யார் என்பது உங்களுக்கே தெரியும். அவர்களிலும் ஒரு சிலர் மனம் திருந்தி எங்களுடன் இணையலாம். அதனால், தற்போது அவர்கள் பெயரை சொல்வது சரியாக இருக்காது.

மேலும், நியாயத்திற்காக பதவியை தியாகம் செய்து எங்களுடன் உள்ள 18 எம்.எல்.ஏக்களில் ஒருவர் முதல்வராக வருவார். நான் முதலமைச்சராக வர வேண்டும் என்று நினைக்கவில்லை.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் முன்பு சசிகலாவின் வழக்குரைஞர் ஆஜர் ஆவார்" என்று பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios