தமிழகம் முழுவதும் ஓராண்டு நடைபயணம் - அண்ணாமலை அறிவிப்பு
அறிவாலய ஊழல், வாரிசு அரசியல் எதிர்ப்பு என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் ஒருவருட காலத்திற்கு நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது, மாநில அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிரடி காட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி அடுத்த ஓராண்டு முழுவதும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை.. கடுப்பான தமிழக பாஜக !
அறிவாலய ஊழல், வாரிசு அரசியல் எதிர்ப்பு என்ற பெயரில் இந்த நடைபயணம் 234 தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. நடைபயணத்தின் போது மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாக விளக்குவது, மக்களிடம் உள்ள பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அறிந்துகொள்வது உள்ளிட்ட நிகழ்வுகள் இதில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும், தமிழகத்தில் இருந்து கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறவேண்டும் என்ற முனைப்பில் தமிழக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்ணாமலையின் இந்த நடைப்பயணம் 2024 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.