தேர்தலுக்கான முந்தைய கருத்து கணிப்பை நடத்திய தனியார் தமிழ் தொலைக்காட்சி குறைந்த அளவிலான மக்களிடம் கருத்துகளை கேட்டு புள்ளி விவரங்களாக வெளியிட்டு மக்களை திசை திருப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தலுக்கான முந்தைய கருத்து கணிப்பை நடத்திய தனியார் தமிழ் தொலைக்காட்சி குறைந்த அளவிலான மக்களிடம் கருத்துகளை கேட்டு புள்ளி விவரங்களாக வெளியிட்டு மக்களை திசை திருப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஞ்ஞான ரீதியாக போதுமான அளவு சாம்பிள்கள் இல்லாத கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில பத்திரிக்கையாளர்களும், அரசியல் பார்வையாளர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழக தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மக்களின் நாடித் துடிப்பை அறிந்து கொள்ள தனியார் அமைப்புகள் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஜனநாயகத்தின் குரல் என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் அ.தி.மு.க கூட்டணி 122 இடங்களையும் தி.மு.க 111 இடங்களையும் பெறும் என்றும், இரு கூட்டணிளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்ட விதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்து கணிப்பு, தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 20 மாவட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சட்டமன்ற தொகுதி, அதில் 10 இடங்கள் என ஒவ்வொரு இடத்திலும் 25 நபர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 29 லட்சத்து 23 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ள நிலையில் , வெறும் 5000 பேரிடம் மட்டுமே இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குறைந்த அளவு நபர்களிடம் மட்டுமே கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் விவரங்களை தனியார் தொலைக்காட்சி புள்ளிவிவரங்களாக வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் உண்மை நிலவரத்தை தெரிவிக்காது என்று புள்ளியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும், கருத்து கணிப்புகள் பிப்ரவரி 18ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. சசிகலாவின் “அரசியல் ஓய்வு” அறிவிப்பிற்கு முன் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. சசிகலாவின் அறிவிற்கு பின் அரசியல் அரங்கில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி, தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் சர்வேக்கு பின் நடைபெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பு முடிவுகள் கள எதார்த்தத்தை பிரதிபலிப்பவையாக இல்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து கணிப்பில் கேள்விகள் வடிவமைக்கப்பட்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ”அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்” என்ற கேள்வியில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் கமல்ஹாசன் வரிசையில் சசிகலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. சசிகலா அடுத்த 6 வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலையில் அவர் பெயர் எதற்காக சேர்க்கப்பட்டது, அதில் உள்நோக்கம் உள்ளதா ? என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதேபோல் கருத்து கணிப்பில் கேட்கப்பட்ட அநேக கேள்விகள் முரண்பட்டதாக உள்ளதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இந்த கருத்துகணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளே , மிகவும் ஒருதலைபட்சமாக இருக்கிறது என்றும் சிலர் தங்களது கருத்தை பதிவு செய்திருந்தனர்.
குறைந்த எண்ணிக்கையிலான மக்களிடத்தில் எடுக்கப்பட்ட சர்வே குளறுபடியான கேள்விகள் என தனியார் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
