One more mla support to ops
அடுத்த அதிரடி…மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு அளித்ததால் உற்சாகத்தில் ஓபிஎஸ் அணி ……

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணிக்கு கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் திடீரென ஆதரவு அளித்துள்ளார். இதையடுத்து ஓபிஎஸ் அணி ஆதரவு எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து சசிகலா முதலமைச்சராகும் வகையில் ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் சசிகலா முதலமைச்சராகும் முன்பே, போர்க்கொடி உயர்த்திய ஓபிஎஸ் தன்னை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என திடீர் குண்டை தூக்கிப் போட்டதால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில்தான் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்தததால்,சசிகலாவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏ க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டனர்.
ஆனால் அந்த நட்சத்திர விடுதியில் இருந்தது கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் தப்பி தனது ஊருக்கு சென்று விட்டார். பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அருண்குமார் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் அருண்குமார் ஓபிஎஸ்ஐ சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது பேசிய அருண் குமார் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுக ஒரே குடும்பத்தின் கையில் உள்ளதாகவும், இதனை தன்னால் ஏற்று கொள்ள முடியாது என்றும் கூறினார்.
ஏற்கனவே 11 எம்எல்ஏக்களுடன் செயல்பட்டு வந்த ஓபிஎஸ் அணிக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு அளித்திருப்பதால் அந்த அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
