ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் மது விற்பனை ரூ.170 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் 44 நாட்களுக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன. தமிழகத்தில் 5,299 டாஸ்மாக் கடைகளில், சென்னையில் இருக்கும் 536 கடைகள் தவிர்த்து பிற கடைகள் நேற்று  முதல் செயல்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதை எதையும் பொருட்படுத்தாமல் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.  ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, கொளுத்தும் வெயிலில் நின்று வாங்கிச் சென்றனர். பல கடைகளில் மதுபாட்டில்கள் மதியமே விற்றுத்தீர்ந்தது. 

இந்நிலையில், நேற்று ஒரே நாளில்  170 கோடி அளவுக்கு விற்பனை நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கும்,   சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும், திருவண்ணாமலையில் 5 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே ஒரே நாளில் அதிக அளவில் தமிழகத்தில்தான் மது விற்பனை நடந்துள்ளது. இது மோசமான முன்னுதாரணம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களில் அதிகமாக மது விற்பது வழக்கம். காலையில் இருந்து மாலை வரை தமிழகத்தில் மது விற்பனை ஜோராக நடக்கும். கடந்த டிசம்பர் 31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தேதி ஆகிய 2 நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் 320 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.