கடந்த 4ம் தேதி டிடிவி.தினகரன் அதிமுக நிர்வாகிகளின் புதிய பட்டியலை வெளியிட்டார். இதற்கு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். டிடிவி.தினகரன் கட்சியில் இல்லாதபோது, அவர் எப்படி நிர்வாகிகளை நியமிக்கலாம் என கேள்வி எழுப்பினர். இதனால், அதிமுகவில் சர்ச்சை ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்களா என்ற குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், சுமார் 10.30 மணியளவில் வடசென்னை மாவட்ட செயலாளரும், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

டிடிவி.தினகரனின் ஆதரவாளர், நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டதை பார்த்ததும், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.