நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் நாராயணசாமி வன்முறையை தூண்டி வெற்றி பெற திட்டமிட்டுள்ளார் என அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகர் புகார் கூறி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

நெல்லிதோப்பு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நவீனா கார்டன் திருமண நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை 8.30 மணிக்கு ஓம்சக்திசேகர் தனது மகன்கள், மருமகளுடன் வாக்களிக்க வந்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நெல்லித்தோப்பு தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற முடிவு செய்துள்ளனர். ஆனால் முதல்வர் நாராயணசாமி தேர்தலில் வன்முறையை தூண்டி விட்டு வெற்றி பெற திட்டமிட்டுள்ளார். அனைத்து வாக்குச்சாவடிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாக தேர்தல் விதிகளின்படி வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் வெளியூரை சேர்ந்த காங்கிரஸ், திமுக தொண்டர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குவிந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி பொதுமக்களை, அவர்கள் வற்புறுத்துகின்றனர். இதுதேர்தல் விதிகளுக்கு முரணானது. காவல்துறை முதல்வர் நாராயணசாமியின் கைப்பாவையாக செயல்படுகிறது.

தேர்தல் பொது பார்வையாளரிடம் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. காவல்துறை அவரது உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கிறது. தேர்தல் ஜனநாயக ரீதியில் முறையாக நடைபெற்றால் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார் ஓம்சக்திசேகர்.