புதுச்சேரியையும் சேர்த்து மொத்தம் இருக்கும் நாற்பது தொகுதிகளில் தி.மு.க. நிற்கப்போவது வெறும் இருபதே தொகுதிகளில்தான். இதிலும் கட்சியின் புதிய தலைமுறை நபர்களுக்கும், கடந்த சில ஆண்டுகளாக தன்னலம் பாராமல் கட்சிக்கு உழைத்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பில்லாமல், பல முறை அதிகாரத்தை சுவைத்த பழைய சீனியர்களில் அதிகம் பேருக்கே மீண்டும் சீட் வழங்கப்பட இருக்கிறது! என்று பரவிக்கிடக்கும் பேச்சுதான் அறிவாலயத்தில் சூட்டை கிளப்பியுள்ளது. 

விவகாரம் என்ன?....

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு கொடுக்க கடைசி நாள் இன்று. போட்டியிட வாய்ப்பு கேட்டு பல வி.ஐ.பி.க்கள் மனு அளித்துள்ளனர் அக்கட்சியில். அந்தவகையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு டி.ஆர்.பாலுவும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு  ஜெகத்ரட்சகனும், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கனிமொழியும்  மனு அளித்துள்ளனர். 

சூழல் இப்படி இருக்கும் நிலையில், ‘கட்சி குறைவான தொகுதியில் போட்டியிட இருப்பதால் கட்டாய வெற்றி அவசியம். எனவே அந்தந்த தொகுதியில் மக்களுக்கு ஏற்கனவே பரீச்சயமான மற்றும் எதிர்கூட்டணியின் செலவுகளுக்கு ஈடுகொடுத்து பணத்தை புழங்கும் திறனுடைய நபர்களுக்கே சீட் கொடுக்கும் முடிவில் தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்.’ என்று நேற்று முதல் ஒரு பேச்சு சுழன்றடிக்கிறது அறிவாலயத்தில். 

இந்த தகவல், தி.மு.க.வின் புதிய தலைமுறை நிர்வாகிகளை எரிச்சலூட்டியுள்ளது. விரிவான விவாதங்கள் இப்போதே அறிவாலத்தில் தோன்றியுள்ள நிலையில், இது பற்றி பேசும் அரசியல் விமர்சகர்கள்...

கருணாநிதியின் மகளும், தற்போதைய தலைவர் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழின் ராஜ்யசபா  வழியாக கணிசமான வருடங்கள் டெல்லியில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். அவர் நினைத்தால் சட்டமன்றத்துக்கு தன்னை இறக்கிக் கொண்டு, மகளிரணியில் வீரியமாக செயல்படும் ஏதாவது இளம் பெண்ணுக்கு வாய்ப்பை வழங்கலாம். மகளிர் மேம்பாடு பற்றி மூச்சு திணற பேசிவரும் கனிமொழி இதை செய்தால் அவரை தமிழகமே போற்றும்! ஆனால் அந்த தியாகத்தை செய்ய அவர் முன்வர மாட்டார். காரணம்?...2ஜி வழக்கில் ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையான தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளது. இதை எதிர்கொண்டு சமாளிக்க டெல்லியில் கனிமொழிக்கு அதிகாரம் தேவை. எனவே இந்த தியாக முடிவை கனி எடுக்கவே மாட்டார். 

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாஜி மத்திய மந்திரி ஆ.ராசா, நீலகிரியை கேட்டுள்ளார். கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் அவர் அங்கேதான் நிறுத்தப்பட்டார். இந்த முறையும் தனக்கே நீலகிரி என்று சொல்லி வேலைகளை துவங்கிவிட்டார். தனி தொகுதியான நீலகிரி தொகுதியை தலித்துகள் பட்டியலின் அடிமட்டத்திலிருக்கும் அருந்ததியரை மனதில் வைத்துதான் தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. காரணம், இந்த தொகுதியின் கீழ் வரும் ஆறு சட்டசபைகளிலும் அருந்ததியர்கள் அதிகம் வாழ்கிறார்கள். ஆக தி.மு.க.வை சேர்ந்த அல்லது கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒரு அருந்ததிய நிர்வாகி பலன் பெறும் வகையில் அந்த தொகுதியை ஒதுக்கலாம். ஆனால் அதை செய்யாமல் மீண்டும் மீண்டும் ராசாவுக்கே கொடுக்கிறார்கள். கனிமொழி போல் இவருக்கும் 2ஜி பஞ்சாயத்து இருப்பதை காரணமாக காட்டுவார்கள்!

மத்திய அமைச்சர்களாகவும், எம்.பி.க்களாகவும் டெல்லியில் கோலோச்சி, கட்சியில் அதிகாரங்களை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் டி.ஆர்.பாலுவும், ஜெகத் ரட்சகனும். இவர்களுக்கும் அவர்கள் கேட்ட தொகுதியில் சீட் கொடுப்பார்கள் நிச்சயம். பாலுவின் மகன் ராஜா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார், ஜெகத்தோ என்னதான் தன்னை இலக்கிய வல்லுநராக காட்டிக் கொண்டாலும் கைகொடுப்பதோ மது ஆலைகள் கொட்டிக் கொடுக்கும் கணக்கு வழக்கில்லாத கோடான கோடிகள். ஆக இவர்களுக்கே மீண்டும் சீட்டுகள் கிடைக்கும். 

இப்படித்தான் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் பல தொகுதிகள்  பழைய சீனியர்களுக்கே போய் சேரும். ஆனால் பதவியையும், ஏற்றத்தையும் எதிர்பார்த்து, இந்த கால சூழலுக்கு ஏற்ப கட்சிக்காக உழைக்கும் இளம் தலைமுறையினர் ‘டெல்லி பதவி’யை வெறுமனே கனவில் மட்டுமே காண முடியும் போல. இந்த ஆண்ட பரம்பரைகள் ரிட்டயர்டு ஆகும்போது அவர்களின் வாரிசுகள் வந்து நிற்பார்கள் பொசிசனுக்கு.  

ஆள்றவனுக்கு சீட் கொடு, உழைக்கிறவனுக்கு வேலையை கொடு! இதுதானே காலங்காலமாக தி.மு.க.வின் தாத்பர்யம்!...என்று போட்டுப் பொளக்கிறார்கள் விரிவான விமர்சனத்தை. 

யோசிங்க தளபதி!