மரணத்துக்கு பின் ஜெயலலிதாவின் கம்பீரத்தை கருவறுக்கும்  நபர்களில்  மிக முக்கியமான இடத்திலிருப்பவர் அவரது அண்ணன் மகள் தீபா. தனி அமைப்பு, தனி கட்சி, நண்பர் ராஜாவுடன் நகர் வலம், கணவர் மாதவன் மீது போலீஸில் புகார்! என்று அவர் அடிக்காத லூட்டிகளே கிடையாது. 

ராஜாவை கட்சியில் வைத்துக் கொள்ள வேண்டாம்! என்று தீபாவுக்கு பல முறை அவரது கழக (!?) நிர்வாகிகள் பல முறை அறிவுறுத்தினர். இதனால் ஒரு முறை ராஜாவை கட்சியிலிருந்து தூக்கியவர் பின் மீண்டும் இணைத்துக் கொண்டார். பிறகு ஒன்றாக வலம் வந்தனர் இருவரும். இந்நிலையில் இப்போது மீண்டும் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் தீபா. 

இந்த செய்கையை, சசிகலாவை  ஜெயலலிதா நீக்குவதும் பின் மீண்டும் இணைப்பதுமாக இருந்த செயலோடு ஒப்பிட்டு சிலர் பேச, அதிருப்தி மற்றும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே போய்விட்டனர் ஜெயலலிதாவின் லட்சக்கணக்கான விசுவாசிகள். 

இந்நிலையில், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ராஜா, என்னதான் சொல்கிறார் இந்த விரட்டல் பற்றி என அவரிடமே கேட்டபோது?... “நடந்த உண்மைகள் வேறு, ஆனால் வெளியில் பரப்பப்படுற விஷயங்கள் வேறங்க. இப்பவும், எப்பவும் தீபாவுக்கு என் மேலே அழியாத நட்பு, பாசம் உண்டு. ஆனால் தீபாவுக்கு எப்பவுமே மாதவனால்தான் ஆபத்து. 


 
தீபா என்னை இந்த தடவை கட்சியை விட்டு நீக்குறதுக்கு முன்னாடி நானே வெளியில் போகிற முடிவை சொல்லிட்டேன். இந்த முடிவை தீபக்கிடம் சொல்லிட்டுதான் வந்தேன். பிறகு தீபாவா எனக்கு போன் பண்ணி ‘தீபக் வீட்டுல வந்து பிரச்னை பண்றான். சீக்கிரம் வா’ன்னு சொன்னதாலே அங்கே போயி நின்னேன். 

அந்த நேரம் பார்த்து மாதவன் உள்ளே வந்து என்னை எதிர்த்து கோஷம் போட்டார். இந்த மாதவன் இருக்காறே மாதவன், அவரு என்ன மதம்? அவரோட உண்மையான பெயர் என்ன? இதெல்லாம் வெளியுலகத்துக்கு தெரியுமா, தெரியாது. அவரு தீபாவை ஏமாற்றித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். 

உண்மையை சொல்லப்போனா சசிகலாவின் கைக்கூலி மாதவன் தான். அவருதான் சசி மற்றும் டி.டி.வி.யிடம் பணம் வாங்கிக்கொண்டு தீபாவை அரசியலில் விஸ்வரூபமெடுக்க விடாமல் (அவ்வ்வ்வ்....) தடுக்கிறார். அவரோட ஒரே எண்ணம், தீபாவுடைய கட்சியை கைப்பற்றுவதும், கலைக்கிறதும்தான். பணத்துக்காக மாதவன் என்ன வேணாலும் செய்வார், இப்பவும் சொல்றேன் தீபாவுக்கு என் பாதுகாப்பில் அக்கறை உண்டு, ஆனால் தீபாவின் பாதுகாப்புக்கு ஆபத்து மாதவனால்தான். 

எனக்குள்ள இன்னொரு வருத்தம்... பாரம்பரியமான அ.தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவன் நான். ஆனால் என்னை தீபாவோட டிரைவர்!ன்னு அடையாளப்படுத்தி கேவலப்படுத்துறாங்க. தீபாவோட காரை ஓட்டுறது மட்டுமா என் வேலை? எனக்குன்னு நெய் பிஸ்னஸ் இருக்குது, லூப்ரிக்கண்ட் ஆயில் பிஸ்னஸ் இருக்குது.” என்று கோபம், ஆதங்கம், பரிதாபம் என நவரசம் காட்டியிருக்கிறார்.