நாட்டில் முதன் முறையாக ஒடிசா மாநிலம் கொரோனா ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்திவருகிறது. எகிறிவரும் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகளும் கூடிவருகின்றன. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 21 நாட்களுக்கு இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு ஏப்ரம் 14-ம் தேதியுடன் காலாவதியாக உள்ளது.  ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பை மனதிக் கொண்டு ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.  ஒடிசாவில் இன்று மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும்” என்று தெரிவித்தார்.


நாட்டில் முதன் முறையாக ஒடிசா மாநிலம் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. பிரதமரின் அறிவிப்புக்காகக் காத்திருக்காமல் ஒடிசா மாநிலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.