Asianet News TamilAsianet News Tamil

எம்.நடராஜனின் கிட்னி ஆபரேஷனுக்கு சிக்கலா? வருகிறார் சசிகலா!

obstacles over m natarajan cadaver transplantation is it true
obstacles over m natarajan cadaver transplantation is it true
Author
First Published Oct 1, 2017, 2:41 PM IST


கல்லீரல், சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார் எம்.நடராஜன். அவரைப் பார்க்க வருவதற்காக, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, பரோலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இந்தக் காத்திருப்பின் பின்னே அரசியல் தாக்குதலைத் தாங்கிய சில செய்திகளும் பரவி வருகின்றன.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவர் கணவர் நடராஜன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்துவிட்ட நிலையில், உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உறுப்பு தான மையத்தில் கல்லீரலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில், டயாலிசிஸ் சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக அதிமுக (அம்மா) செயலாளர் புகழேந்தி, “பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா வரும் 3ஆம் தேதி பரோல் கோரி விண்ணப்பிக்க உள்ளார்” என்று தெரிவித்தார். முன்னதாக, கடந்த 26ஆம் தேதி இதே போன்று பரோல் குறித்த செய்தி வெளியானபோது, அதை மறுத்தார் புகழேந்தி. அதன் பின்னணியில் கர்நாடக சிறைத்துறை இருந்ததாகக் கூறப்படுகிறது. சென்னை மருத்துவமனையில் இருந்து நடராஜன் உடல் நிலை குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்பே பரோல் விண்ணப்பம் மீது பரிசீலனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதால், விண்ணப்பம், பரிசீலனை என்றெல்லாம் சில பல தடைகளை எதிர்கொள்ள யோசித்து, சற்றே பின்வாங்கியதாகக் கூறப்பட்டது. ஆனால், நடராஜன் உடல்நிலை மோசமடைந்ததால், அறுவை சிகிச்சையை முன்னிட்டு அவர் அடுத்த வாரம் பரோலில் வரக்கூடும் என்றே தெரிகிறது. 

இதற்கிடையில்,  சசிகலா கணவர் நடராஜனின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை மருத்துவக் கல்வி இயக்குனர் (Director medical education) இதுவரை அனுமதி அளிக்காமல் தாமதம் செய்து வருகிறார் என்றும், அதனால் நடராஜன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்றும், இது விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது எனக்குத் தெரியாது என்று மழுப்பியதாகவும்  ஒரு தகவல் வாட்ஸ்அப் வாயிலாகப் பகிரப்பட்டு வந்தது.

இது குறித்து சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் விசாரித்தோம். இதற்கு விளக்கம் அளித்த அவர், இந்த விவகாரத்துக்கும் அரசுக்கும், அல்லது அரசுத் துறைக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. கடந்த வெள்ளிக்கிழமையே கல்லீரல் உறுப்பு தானம் செய்பவர் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டு, அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது.  

இது குறித்து நானும் மருத்துவக் கல்வி இயக்குனரிடம் பேசினேன். அவர் அளித்த விளக்கத்தின்படி, கல்லீரல் தானம் செய்பவர் குறித்த ஒப்புதல் கடிதம், மருத்துவக் கல்வி இயக்குனரால் (டி.எம்.இ) சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களிடம் வெள்ளிக்கிழமை கமிட்டி கூட்டத்துக்குப் பின் உடனே வழங்கப்பட்டு விட்டது. எனவே இது தவறான செய்தி. இத்தனைக்கும், வியாழக்கிழமை பெறப்பட்ட மனுவுக்கு அன்றே பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைப்  பொறுத்த அளவில், சம்பந்தப்பட்ட நோயாளி, பட்டியல் வரிசையில் நான்காவதாக உள்ளார்.  அது, வரிசை மூப்பின் அடிப்படையில், மூளைச் சாவடைந்த நபரின் உறுப்பு கிடைப்பதற்கேற்ப உடனே அனுமதிக்கப்படும். இது, நிச்சயமாக வரிசை மூப்பின் அடிப்படையில் கம்ப்யூட்டர் மூலம் அனுமதிக்கப்படுகிறது. மேலும், தொடர்புடைய நபருக்குச் சரியான ரத்த வகை (பிளட் குரூப்) அடிப்படையில் அனுமதிக்கப்படும். எனவே இந்த விவகாரத்தில் டி.எம்.இ.யின் பெயரை வேண்டுமென்றே கொண்டு வருவது சரியல்ல என்று கூறினார். 

இவ்வாறு தகவல் அளித்த ராதாகிருஷ்ணன், சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் மத்திய அமைச்சராக இருந்த விலாஸ் ராவ் தேஷ்முக்கிற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது,  இதே போன்ற சீனியாரிட்டி முறைதான் கடைபிடிக்கப்பட்டது. அப்போதும் அது ஒரு பிரச்னை ஆனது. எனவே, இந்த விவகாரத்தில், மற்ற மருத்துவமனை ஏதேனும், தங்களுடைய நோயாளியின் வரிசையை முன்வந்து மாற்றிக் கொடுத்து, அல்லது விட்டுக் கொடுத்தால் உடனே இது நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த அந்த மருத்துவமனைகள் தங்களின் நோயாளிகளையும் அதே சம வாய்ப்பில் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். இந்த வகையில், முதல் மூன்று பேர்களில் யாராவது விட்டுக் கொடுத்தால், இவருக்கு உடனே அறுவை சிகிச்சை நடைபெற வாய்ப்பு ஏற்படும். இந்த விஷயத்தில், அரசு அல்லது துறை தலையிட்டு எதுவும் செய்யமுடியாது. 

உயிர் என்று வரும் போது, அவர் இவர் என்று எந்த பேதமும் பார்க்காமல், வரிசையாக அந்த அந்த மருத்துவமனை பதிவுகளின் அடிப்படையில் அவர்களாக மேற்கொள்வார்கள். இப்போது இதே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பட்டியலில் ஒரு பாகிஸ்தானியரும் இருக்கிறார். வேற்று நாட்டு நோயாளிக்கே நாம் அவ்வளவு உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் மருத்துவ சிகிச்சையை அளித்து வரும்போது, நம் நாட்டவரை ஏன் புறந்தள்ளப் போகிறோம். எனவே இது அரசியல் ரீதியாக அரசையும் துறையையும் களங்கப்படுத்த மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரம் என்று  பதிலளித்தார். 

இருப்பினும், அடுத்த வாரம் எப்படியும் எம்.நடராஜனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றே தெரிகிறது. அதற்காக, சசிகலா அடுத்த வாரம் மத்தியில் சென்னைக்கு வரும் வாய்ப்பு அதிகரித்திருப்பதால், இப்போதே அரசியல் வட்டாரம் சூடு பிடித்திருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios