ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்ஜிஆர் ஆகியவற்றை கையகப்படுத்த சட்டப்படி நடவடிக்கை என எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்துள்ள வெற்றிவேல் எம்எல்ஏ, ஓபிஎஸ்-ம், இபிஎஸ்-ம் தங்கள் சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஜெயா தொலைக்காட்சியையும், நமது எம்ஜிஆர் பத்திரிக்கையையும் கையகப்படுத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், ஜெயா தொலைக்காட்சியும், நமது எம்ஜிஆர் பத்திரிக்கையும் என்ன ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு சொந்தமானதா? என கேள்வி எழுப்பினார்.

இந்த இரு நிறுவனங்களையும் சசிகலாவிடம் பேசி கட்சிக்கு எழுதி வைக்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்த வெற்றிவேல், ஓபிஎஸ்-ம், இபிஎஸ்-ம் தங்கள் சொத்துக்களை எழுதி வைக்க தயாரா? என வினா எழுப்பினார்.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, பிரமாணப் பத்திரத்தை, திரும்பப் பெறப்போவதாக ஓபிஎஸ் சொல்வது கோமாளித்தனமானது என வெற்றிவேல் கூறினார்.

தமிழகத்தில் தற்போது துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திதான் முதலமைச்சர் போல் செயல்படுகிறார் என்றும், ஓபிஎஸ், இபிஎஸ் போன்றவர்களை குருமூர்த்திதான் இயக்குவதாகவும் வெற்றிவேல் குற்றம்சாட்டினார்.