Asianet News TamilAsianet News Tamil

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல... அதிமுகவை விமர்சித்த கே.எஸ்.அழகிரிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி!!

சொந்தக் காலில் நிற்காமல் அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமை கிடையாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

o panneerselvam slams k s alagiri over his admk remarks
Author
Tamilnadu, First Published Feb 24, 2022, 5:54 PM IST

சொந்தக் காலில் நிற்காமல் அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமை கிடையாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி, தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகிற பாஜக எதிர்ப்புகளை எந்த காலத்திலும் அவர்களால் எதிர்கொள்ள முடியாது. ஏனெனில், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக பாஜக செயல்பட்டு வருவதால் எதிர்காலமே இல்லாத கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. இதனால்தான் இக்கட்சியோடு கூட்டணி வைக்க அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் தயாராக இல்லை. தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வியை அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கொங்கு மண்டலமே படுதோல்வியைக் கண்டிருக்கிறது. இது ஒரு மாயை என்பதை தேர்தல் நிருபித்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது என்று விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல' என்ற பழமொழிக்கேற்ப ஒரு காலத்தில் அகில இந்திய அளவில் 400க்கும் அதிகமான இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி இன்று 40 இடங்களுக்கு அல்லல்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி சிந்திக்காமல், அதிமுகவை விமர்சனம் செய்துள்ளார்கள். 1967ஆம் ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தது கட்சி காங்கிரஸ் கட்சி.

o panneerselvam slams k s alagiri over his admk remarks

55 ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதிமுக, திமுக என மாறி, மாறி அடுத்தவர் முதுகில் சவாரி செய்து ஒரு சில இடங்களைப் பெற்றுவரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. அதைப்பற்றி சிந்திக்காமல், அதிமுகவுக்கு எதிர்காலமில்லை என கே.எஸ்.அழகிரி கூறியிருப்பது நகைப்புக்குரியது. அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, 1952ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு இதுவரை நடைபெற்ற 16 பொதுத் தேர்தல்களில் 6 முறை வெற்றி பெற்று, 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சி அதிமுக. அதாவது மொத்தமுள்ள 70 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியும், 22 ஆண்டுகள் திமுகவும், 30 ஆண்டுகள் அதிமுகவும் ஆட்சி செய்துள்ளன. அதிமுக சந்தித்திராத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் தோல்வியைக் கண்டு துவண்டதில்லை, மாறாக மீண்டெழுந்து வந்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தாலும், அதன் பிறகு 1998ஆம் ஆண்டு எம்பி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. 2001ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 2004ஆம் ஆண்டு எம்பி தேர்தலில் தோல்வியைச் சந்தித்தாலும், அதன் பின் நடைபெற்ற 2006ஆம் ஆண்டு மிகப் பெரிய எதிர்க்காட்சியாக உருவெடுத்தது. 2011ஆம் ஆண்டு ஆட்சியையும் பிடித்தது.

o panneerselvam slams k s alagiri over his admk remarks

பின்னர், 2014ஆம் ஆண்டு மக்களவையில் 3ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்ததோடு, எவ்விதக் கூட்டணியும் இல்லாமல், தொடர்ந்து இரண்டாவது முறையாக 2016ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி எங்கள் கையை விட்டுச் சென்றது. திமுக ஆட்சி அமையப் பெற்றது. திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? அதன் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை. எனவே இதைவைத்து அதிமுகவுக்கு இனிமேல் எதிர்காலமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கூறியிருப்பது பகல் கனவு. இது நிச்சயம் பலிக்காது. 'இலவு காத்த கிளி போல' ஏதாவது ஒன்றிரெண்டு மேயர், துணை மேயர் பதவிகள் கிடைக்குமா என்ற ஆசையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இதுபோல் பேசியிருப்பார் என்றே நான் கருதுகிறேன். சொந்தக் காலில் நிற்காமல் அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு அனைத்திந்திய அதிமுகவைப் பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமை கிடையாது. அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மூழ்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றவும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டு எம்பி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios