அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் பொதுக்குழு கூட்டத்தை  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது, மாவட்ட செயலாளர்களில் 75 பேரில் 64 பேர் எடப்பாடி பழனிசாமிக்கும், 11 பேர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சிறப்பு அழைப்பாளர்கள் இல்லாமல் கூட்டம் நடத்தக்கூடாது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இபிஎஸ் தரப்பு, ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் தான் கொரோனா பாதிப்பு காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை கூட்ட வேண்டாம் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவரே இப்படி கூறி இருப்பது ஏன் என்று தெரியவில்லை என தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் பொதுக்குழு கூட்டத்தை நிறுத்த அடுத்த கட்டமாகவும் கடைசி ஆயுதமாகவும் நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு நாடியுள்ளது. நீதிமன்றத்தில் விசாரணை இன்று வரவுள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா இல்லையா? என்பது தெரியவரும்

பொதுக்குழுவை புறக்கணிக்கிறாரா ஓபிஎஸ் ?

அதிமுகவில் 2600க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில், பொதுக்குழுவை நடத்தவும் பொதுக்குழுவில் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு 2300 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் மூலம் கடிதத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவு அளித்துள்ளனர். எனவே இந்த கடிதத்தையும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தீர்ப்பின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி கலந்து கொண்டாலும் தனது கருத்துகளை மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் எடுத்துரைக்க முடியும். ஒற்றை தலைமை தீர்மானம் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறும் என தகவல் கூறப்படுகிறது. எனவே பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் வரும் நாட்களில் வழக்கு தொடர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு தனது எதிர் கருத்துக்களை தெரிவித்தால் தேவையற்ற பிரச்சனைகளும் தொண்டர்கள் இடையே மோதலும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பொதுக்குழு கூட்டத்தை ஓ.பன்னீர் செல்வம் புறக்கணிக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

ரவுடிகளை இறக்கி ரவுண்டு கட்டபோகிறார் EPS.. தொண்டர்கள் ரத்தம் சிந்த விரும்பவில்லை OPS..கதறும் Ex நிர்வாகி.