பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் அதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட ரூ.2400 கோடி லஞ்சம் தொடர்பான தகவல் அம்பலமாகியுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த கிறிஸ்டி பிரைட் கிராம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, சேலம், கோவை, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

 

மேலும் திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் கிறிஸ்டி நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிடிக்கள், பென் டிரைவ்கள், ஹார்ட் டிஸ்க்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த ஹார்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்களை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

கிறிஸ்டி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முறைகேடாக கொடுத்த பண விவரம் அந்த பென் டிரைவ் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தன. ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பட்டப் பெயர் வைத்து மாதம் தோறும் லஞ்சப்பணம் கைமாறிய விவரம் அதில் இருந்துள்ளது. ஒட்டு மொத்தமாக சுமார் 2400 கோடி ரூபாய் வரை பணம் லஞ்சமாக கைமாறியதற்கான தகவல்கள் அந்த ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பென் டிரைவ்களில் இருந்துள்ளன. 

அதாவது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு தயாரிக்க தேவைப்படும் பருப்பு, எண்ணெய், முட்டை போன்றவற்றை சப்ளை செய்வது தான் கிறிஸ்டி நிறுவனத்தின் பணி. இந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் ஒப்பந்ததை பெறுவதற்கு  அமைச்சர்களுக்கு கிறிஸ்டி நிறுவனம் கோடிகளில் லஞ்சம் கொடுத்துள்ளது. மேலும் பொருட்களை கூறிய தரத்திலும், எண்ணிக்கையிலும் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபடவும் லஞ்சம் கைமாறியுள்ளது. இந்த விவரங்களை மோப்பம் பிடித்துள்ள வருமான வரித்துறை கிறிஸ்டி நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை விரைவில் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.