கொரோனா தொற்று நோய் தடுப்பில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அவதூறாகப் பேசினாலோ குண்டர் சட்டம் பாயும் என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., வருண்குமார் எச்சரித்துள்ளார்.

ஊரடங்கு அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், முன்பை விட கொரோனா பாதுகப்பு பணியில் தீவிரம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் எஸ்.பி., வருண் குமார் விடுத்துள்ள எச்சரிக்கையில், ‘’இராமநாதபுரத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை  அவதூறாகப் பேசினாலோ, தாக்கினாலோ மற்றும் பணி செய்ய விடாமல் தடுத்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.

அரசின் ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களை தண்டிப்பது எங்கள் நோக்கமல்ல. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதே நோக்கமாகும்’’ எனக் கூறியுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளியில் தேவையின்றி சுற்றித் திரிவதை தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அனைத்து தரப்பினர் மத்தியில் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்டத்தில் 11 தீயணைப்பு வாகனத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தெருக்களில் ஆதரவின்றி இருப்பவர்கள், மன நலம் குன்றியவர்கள் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.