ரெய்டு வரிசையில் அடுத்த முன்னாள் அமைச்சர்..? சீமான் எழுப்பிய கேள்வி.. பதலளிக்குமா ஸ்டாலின் அரசு..
ரேஷன் பொருட்கள் கொள்முதலில் ரூ.1480 கோடி ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ரேஷன் பொருட்கள் கொள்முதலில், அதிகமான விலையில் விநியோகித்து, ரூ.1480 கோடி ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனத்தின் மீதும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? தொடர்ந்து கிறிஸ்டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிப்பதன் காரணம் என்ன?” என தெரிவித்திருக்கிறார்
முன்னதாக கடந்த ஆண்டு பொது விநியோக திட்டத்தில் 1,480 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. ரேஷன் கடைகளுக்கு தேவையான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு ஆகியவற்றை விநியோகம் செய்வதற்கான டெண்டரில் 14 நிறுவனங்கள் பங்கெடுத்து, சந்தை விலையிலேயே பொருட்களை வழங்கி வந்ததாக குறிப்பிட்ட அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், கடந்த 2019 ஆம் ஆண்டு கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே பங்கு பெறும் வகையில் டெண்டர் விதிகளில் தமிழக அரசு மாற்றம் செய்ததாக கூறினார். மேலும் அரசு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சந்தை விலையை விட கூடுதல் விலைக்கே வாங்குவதாக குற்றஞ்சாட்டினார்.
பருப்பு கிலோவுக்கு 20 முதல் 25 ரூபாய் வரையும், பாமாயிலுக்கு 15 முதல் 29 ரூபாய் வரையும் சந்தை விலையை விட கூடுதலாக தமிழக அரசு கொடுப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியது. இதனால் கடந்த ஓராண்டில் மட்டும் தமிழக அரசுக்கு ஆயிரத்து 480 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. இந்த ஊழலுக்கு அப்போதைய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் சுதாதேவியும், முன்னாள் அமைச்சர் காமராஜும் தான் முக்கிய காரணம் என குற்றஞ்சாட்டிய அறப்போர் இயக்கத்தினர், ஆதாரங்களுடன் அப்போதைய முதலமைச்சரிடமும், சிபிஐயிடமும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் இதுக்குறித்து ஆதாரமில்லை என முன்னாள் அமைச்சர் காமராஜ் மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும் ஊழல் புகாரில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என்று விளக்கம் அளித்த அவர், அதை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என்றும் கூறினார். இந்நிலையில் தான் தற்போது ரேஷன் பொருட்கள் கொள்முதலில் ரூ.1480 கோடி ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
சமீபத்தில் திமுக அரசு, பருப்பு கொள்முதல் குறித்த டெண்டரை வெளியிட்டது. அதில் பருப்பு கொள்முதல் விலை கிலோ ரூ.100க்கு குறைவாகவும், 20ஆயிரம் டன் தேவை என்றும் இ-டெண்டர் வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பருப்பு டெண்டர் கொள்முதலில் நடைபெற்ற ஊழல் எங்களால் அம்பலப்படுத்தப்பட்டது என்றும், அப்போதைய தமிழக அரசின் பருப்பு ஒப்பந்ததாரர் பருப்பு கிலோ ரூ.143 விலைக்கு வழங்கினார். தற்போது அது ரத்து செய்யப்பட்டு, கிலோ 100க்கு குறைவான விலையில் வாங்க தமிழக அரசு டெண்டர் கோரியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் இதனால், தமிழகத்துக்கு ரூ.100 கோடி வரை மிச்சப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.