உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி மிகவேகமாக குணமடைந்து வருகிறார் என்றும், அவருடைய இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன், சுவாசம்  போன்றவை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி   சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நேற்று மாலை திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு கலைஞர் வாழ்க  என முழக்கமிட்டனர். தொடர்ந்து இரவு முழுவதும், விடிய விடிய தொண்டர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில்  கருணாநிதி சிகிச்சை பெறும் அறையில் 94, 97 மற்றும் 30 என்ற அளவீடுகளை மானிட்டர் காட்டுகிறது. அதில்  கருணாநிதியின் இதய துடிப்பு 94 ஆகவும், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 97 ஆகவும், சுவாச விகிதம் 30 ஆகவும் இருக்கிறது.

பொதுவாக மனிதனுக்கு இயல்பான நிலையில், நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை இதய துடிப்பு தேவைப்படுகிறது. இதய துடிப்பு 72 என்பது சராசரி ஆகும். அதேநேரத்தில் இதய துடிப்பு 100 வரை தாராளமாக இருக்கலாம்.

ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு 95 முதல் 100 வரை இருப்பது சராசரியானது ஆகும். எனவே 97 இருப்பது நிச்சயமாக கவலைப்படவேண்டியது இல்லை. சுவாசிப்பது என்பது நிமிடத்துக்கு எத்தனை முறை என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 12 முதல் 20 வரை இருக்கவேண்டும்.

அதே சமயத்தில் சுவாச விகிதம் 30 என்பது சற்றே அதிகம் என்றாலும், அதை பொருட்படுத்தவேண்டியது இல்லை. அதற்காக பயப்படவேண்டியதும் இல்லை. ஆக்சிஜன் கொடுக்காமலேயே இந்த அளவு உடல்நிலை இருப்பது நிச்சயமாக அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் என்பதைத்தான் காட்டுகிறது..

ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என்பது அந்த மானிட்டரில் காட்டப்படவில்லை. ரத்த அழுத்தமும் சீராக இருந்தால், கருணாநிதி உடம்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால்  கருணாநிதி அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்றே கூறப்படுகிறது.