தன்னைப் பற்றிய தகவல்களை ஆர்டிஐ மூலம் தரக்கூடாது. விடுதலையை தடுக்க முயற்சிக்கிறார்கள் என குற்றம்சாட்டி சிறை கண்காணிப்பாளருக்கு சசிகலா கடிதம் கொடுத்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் என்னைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் தரக்கூடாது என சசிகலா பெங்களூரு பரப்பன அகரஹார சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். தண்டனை காலம் முடிவடைய உள்ள நிலையில் அவர்கள் சலுகைகள் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

சசிகலாவின் சிறைவாசம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சிறைத்துறையிடம்  நரசிம்ம மூர்த்தி கேள்விகள் எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிறை நிர்வாகம், "2021ம் ஆண்டு ஜனவரி 27ம் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது" என பதிலளித்தது. இந்நிலையில் நரசிம்ம மூர்த்தி, "ஓராண்டுக்கு சசிகலாவுக்கு எத்தனை விடுமுறை நாட்கள்? அதில் எத்தனை நாட்களை அவர் பயன்படுத்தி இருக்கிறார்?" என சிறைத்துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் மக்கள் தொடர்பு அதிகாரி லதா, நரசிம்ம மூர்த்திக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். அத்துடன் சசிகலா தன் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் மூலம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் "நான் சிறையில் இருப்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக நிறைய கேள்விகள் கேட்கப்படுவதாக அறிந்தேன். எனது சிறைவாசம், விடுதலை தேதி தொடர்பாக தொடர்ந்து கேட்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை விளம்பரம் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இதன் மூலம் சட்டப்பூர்வமாக நான் விடுதலையாகி வெளியே வருவதை தடுக்க முயற்சிக்கிறார்கள். எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் என்னைப் பற்றிய தகவல்களை தரக் கூடாது. 2019ம் ஆண்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேதபிரகாஷ் ஆர்யாஸ் என்ற விசாரணை கைதி தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு வேதபிரகாஷ் ஆர்யாஸ் ஆட்சேபம் தெரிவித்ததால் திஹார் சிறை நிர்வாகம் மனுதாரருக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கைப் போலவே எனது விவகாரத்திலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக மூன்றாம் நபருக்கு என்னைப் பற்றிய தகவல்களை அளிக்கக் கூடாது. இவ்வாறு தனிநபர் குறித்த தகவலை மறுக்க தகவல்அறியும் உரிமை சட்டம் 8 (1)-ல் இடமிருக்கிறது. மத்திய தகவல் ஆணையமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது’’என சசிகலா தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்து சசிகலாவை விடுதலையாவதை தடுக்க சதி நடப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த கடிதம் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.