ரஜினி அல்ல மு.க அழகிரி அல்ல யார் கட்சி ஆரம்பித்தாலும் அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் எனவே திமுகவின் வெற்றியை யாராலும் பறிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான காய்நகர்த்தல்களும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திமுக ஒரு படி மேலே போய் " விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்"  என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், திமுக எம்.பி கனிமொழி இன்று  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 

பட்டாசு தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் நளிவடைந்து வருவதால், நாடு முழுவதும் சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தமிழக பட்டாசு தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து நானும் எனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவும், பலமுறை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளோம்.

குறிப்பாக சீனப் பட்டாசு இறக்குமதி குறித்து மத்திய அமைச்சரை நானே பலமுறை சந்தித்து முறையிட்டுள்ளேன். தொடர்ந்து பட்டாசு தொழிலாளர்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். நிச்சயம் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

தமிழகத்தில் தற்போது வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டும் முதல்வராக மட்டுமே இருந்து வருகிறார். தமிழகத்தில் இதுவரை அவர் எந்த ஒரு வேலை வாய்ப்புகளும் உருவாக்கவில்லை எனக் கூறினார். 

அப்போது, மு.க அழகிரி கட்சி ஆரம்பிக்க உள்ளது குறித்தும், அதற்காக அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, திமுகவை வீழ்த்த வேண்டுமென பலரும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றனர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அந்த வகையில் மு.க அழகிரி கட்சி தொடங்கினாலும், அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

திமுகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் தடுக்க முடியாது அதிமுக வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் ரஜினி அண்ணா முக அழகிரி என்ன திமுகவின் வாக்கு வங்கிக்கு யாராலும் பாதிப்பு ஏற்படாது திமுகவின் தேர்தல் அறிக்கை பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும் அதை ஸ்டாலின் உருவாக்கி வருகிறார் என்றார் திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.