அதிமுகவில் ஜெயலலிதா இருந்த காலத்திலேயே ஐவர் குழுவில் இருந்த அந்த முக்கியப்புள்ளி இந்த முறை கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டத்தொடங்கி விட்டார்.

 

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தனது சொந்த தொகுதியான தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.,விடம் மண்ணை கவ்வினார். இதனால் மனமுடைந்த அவரை ஜெயலலிதா தேற்றியதோடு அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நால்வர் அணியில், வைத்திலிங்கத்திற்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்தது.

வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தற்போது காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார். இதற்காக கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் திமுக அதிக வாக்குகள் பெற்ற ஊராட்சிகள் குறித்த சர்வே எடுத்து வருகிறார். அமமுக உள்ளிட்ட மாற்று கட்சிக்கு சென்றவர்கள் பட்டியலை எடுத்து அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் நிகழ்ச்சிகளை தனது தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் விமர்சையாக நடத்தி வருகிறாராம் வைத்திலிங்கம்.