பாமக இளைஞரணித் தலைவர்  அன்புமணி ராமதாஸ் தத்து எடுத்த தர்மபுரி மாவட்ட கிராமம் ஒன்று எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கேட்பாரற்று கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி தத்தெடுத்துள்ளதால் தங்களது வாழ்க்கைத் தரம் உயரும் என எதிர்பார்த்து காத்திருந்த அந்த கிராம மக்கள் , அவர் இங்க வரட்டும் எப்படி கேட்கிறோம் பாரு என கொதித்துப் போயுள்ளனர்.

இது தொடர்பாக தி ஃபெடரல் ஆங்கில செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்டம் மொக்கன்குறிச்சி கிராமத்தின் தற்போதைய நிலை குறித்து தெரியவந்துள்ளது.

கடந்த 80 களில் வன்னியர் சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததால் கடந்த 1988 ஆம் வருடம் டிசம்பர் மாதம் தர்மபுரி மாவட்டம் மொட்டன்குறிச்சி கிராமத்தில் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தி உயிரிழப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு வன்னியர் சமுதாயத்தினருக்காக பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. வன்னியர்களுக்காக மட்டுமே இந்த கட்சி தற்போது இயங்கி வருகிறது. அத்துடன் தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி வைத்து அரசியலில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாமக நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2016 ஆம் வருடம் கூட்டணி இன்றி தனித்து நின்ற பாமக 5% வாக்குகளை பெற்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக வின் தலைவர் அன்புமணி தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பிறகு அவர் மொட்டன்குறிச்சி கிராமத்தை மத்திய அரசின் சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா என்னும் அரசு திட்டத்தின் கீழ் தத்து எடுத்துக் கொண்டார் அன்புமணி.

இந்த கிராமத்தை தத்து எடுத்த போது இங்கு ஸ்மார்ட் பள்ளிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏராளமானவற்றை செய்து இதை ஒரு மாதிரி கிராமமாக மாற்றப்படும் என உறுதி அளித்திருந்தார்.



தற்போது இந்த கிராமத்தின் நிலை குறித்து அறிய செய்தியாளர்கள் மொட்டன்குறிச்சிக்கு சென்றிருந்தனர். அவர்களிடம் பேசிய அந்த ஊர் மக்கள் பாமக அரசியலுக்கு வந்ததும் எங்கள் சமுதாயத்துக்கு ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி ஆகியோர் நன்மை செய்வார்கள் என எண்ணினோம். 

அதனால் 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் அன்புமணியை வெற்றி பெறச் செய்தோம். அதன் பிறகு அவர் எங்கள் கிராமத்தை தத்து எடுத்துக் கொண்டார். அத்துடன் அனைத்து வசதிகளையும் அளித்து மாதிரி கிராமமாக அமைப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் இந்த ஊரில் இரண்டு எல் ஈ டி தெரு விளக்குகள் அமைத்ததைத் தவிர வேறெதுவும் அவ்ர் செய்யவில்லை. அவர் வாக்குறுதி அளித்த குடிநீர் திட்டத்தில் எந்த ஒரு சிறு பணியும் நடைபெறவில்லை. எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் ஒரு துளி குடிநீர் கூட இல்லை. அப்படி இருக்க நாங்கள் அவருக்கு திரும்ப ஏன் வாக்களிக்க வேண்டும்?' என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அன்புமணி எங்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக வாக்களித்தார். ஆனால் ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. ஒவ்வொரு வருடம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என தெரிவித்தார். அதுவும் நடத்தவில்லை.தற்போது நாங்கள் தர்மபுரி நகரில் தினக்கூலிகளாக பணி புரிகிறோம் என சோகமாக குறிப்பிட்டனர்.

அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்த குடும்பத்துக்கு திமுக அரசு மாதம் ரூ.2000 உதவித் தொகை அளிக்க உத்தரவிட்டது. அது மட்டுமின்றி வருடத்துக்கு எங்கள் குடும்பத்துக்கு ரூ.10000 உதவித் தொகை அளித்து வருகிறது என அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்..

இதே போல் அன்புமணி உறுதி அளித்த எதையுமே மொட்டன்குறிச்சி கிராமம் மட்டுமல்ல எத் கிராமத்திற்கும் செய்ததில்லை என குற்றம்சாட்டுகின்றனர். அவர் எங்கள் ஊருக்கு ஓட்டு கேட்டு வரட்டும் அப்போ வச்சுக்கிறோம் என கொந்தளித்துப் போயுள்ளனர்.