Not all fever is dengue - Minister Saroja

தமிழகத்தில் பொதுமக்களுக்கு வரும் அனைத்து காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல என்றும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு பாதிப்பு குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெங்கு பாதிப்பை அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது என்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். 

திமுக எம்.பி. கனிமொழி, தமிழக அரசு டெங்கு பாதிப்பை மூடி மறைப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டெங்குவை கட்டுப்படுத்துவதில் ஆட்சிக்கு கவலை இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்த உண்மைகளை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

முறைகேடு புகார்களில் இருந்து தப்பிப்பது பற்றியே அரசுக்கு கவலை என்றும், டெங்கு காய்ச்சல் பற்றி இந்த ஆட்சி கவலைப்படவில்லை என்றும் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, தமிழக பொதுமக்களுக்கு வரும் அனைத்து காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் அல்ல என்று கூறினார். டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.