முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக வடபழனி முருகன் கோயில் உள்ளது. சாதாரண நாட்களில் கூட அன்றாடம் நூற்றுக் கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கோயிலில் பக்தர்களுக்கு லட்டு, அதிரசம், முறுக்கு போன்ற பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வடபழனி முருகன் கோயிலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியதுடன் அங்கு தரமற்ற முறையில் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் மதிப்புள்ள பிரசாதங்களை பறிமுதல் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக வடபழனி முருகன் கோயில் உள்ளது. சாதாரண நாட்களில் கூட அன்றாடம் நூற்றுக் கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கோயிலில் பக்தர்களுக்கு லட்டு, அதிரசம், முறுக்கு போன்ற பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த பிரசாதங்கள் தரமற்றதாக இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த லட்டு , அதிரசம், முறுக்கு போன்ற பிரசாதங்களை ஆய்வு செய்தனர்.

அந்த பிரசாதங்கள் தனிநபர் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அவை பாலித்தீன் கவரில் அடைத்து விற்கப்பட்டு வந்தது. லட்டு, அதிரசம், முறுக்கு, தட்டை போன்ற உணவு பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட தேதி காலாவதியாகி இருந்தது. மேலும் இந்த பிரசாதங்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது என விசாரித்த அதிகாரிகளிடம், வடபழனி சாஸ்திரி நகரில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கூறினர். பின்னர் அந்த இடத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்த இடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உணவு தயாரிப்பதற்கான உரிமம் பெறாமல் உணவுக் கூடம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிந்தது.
மேலும் தேதி குறிப்பிடாமல் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள லட்டு, முறுக்கு, தட்டை, அதிரசம் போன்ற பிரசாத பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவு தயாரித்த சீனிவாசன் என்பவருக்கு நோட்டீஸ் வழங்கியதுடன், வடபழனி முருகன் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் பிரசாத ஸ்டால் நடத்திவந்த சீனிவாசன் எந்த ஆண்டிலிருந்து ஒப்பந்தம் செய்து வருகிறார், ஆண்டு ஒன்றிற்கு எடுக்கும் டெண்டர் தொகை எவ்வளவு என்பது உள்ளிட்டவைகள் குறித்து கோவில் அறநிலை துறை அதிகாரிகளிடம் விவரத்தைக் கேட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விற்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறது என்ற செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
