பாஜக எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லாது என அறிவிக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடக்கும். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் புதுச்சேரி சட்டப்பேரவையில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

அதற்கு பதிலாக அரசின் 3 மாத செலவினங்களுக்கு மட்டும் அனுமதி பெறப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் இன்று கூடும் சட்டப்பேரவையில் அரசின் 3 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. இதற்காக சட்டப்பேரவை இன்று காலை கூடியது.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையாற்றி சட்டப்பேரவையை தொடங்கி வைத்தார்.  இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்திற்கு புதுச்சேரி அரசு பரிந்துரையின்றி மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்ட 3 பாஜக நியமன எம்எல்ஏக்களுக்கு பேரவைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

மத்திய அரசால் செய்த நியமனம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே சபாநாயகர் வைத்திலிங்கம் நியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. சட்ட வல்லுனர்களை ஆலோசித்த பிறகு அழைக்கிறேன். என தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இன்று காலையில் சட்டபேரவைக்குள் நுழைய முயன்ற நியமன எம்.எல்.ஏ.க்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி கேட்டை பூட்டினர். இதனால் காவலர்களுக்கும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  

இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லாது என அறிவிக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.