சொடக்கு போடும் நேரத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியும் என பேசிய மு.க.ஸ்டாலினுக்கு,  கடப்பாரை போட்டு நெம்பினால் கூட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் 70-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 86 ஏழை ஜோடிகளுக்கு கோவை  தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி கல்யாண மண்டபம் எதிரில் உள்ள பிரமாண்ட பந்தலில்  இன்று திருமணம் நடந்தது.

.விழாவில் 86 ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி அம்மா வீட்டு சீதனமாக 70 வகை சீர்வரிசை பொருட்களை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கினர். 

விழாவில் பவானி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து உக்கடம், ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டவும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஈரோட்டில் நடைபெற்ற திமுக மாநாட்டில்  ஒரு சொடக்கு போட்டால்  அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் என  ஸ்டாலின் பேசி உள்ளார்.

அவருக்கு சொல்லிக் கொள்வவதெல்லாம்  ஒன்றுதான் , சொடக்கு என்ன ? கடப்பாரை போட்டு   நெம்பினாலும் அதிமுக ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என  பதிலடி கொடுத்துள்ளார். அதிகாரத்தை விரும்பும் அளவுக்கு மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறையில்லை  என்றும் எடப்பாடி பேசினார்.