தமிழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

டெல்லி, இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த மாநாட்டில் உணர்ச்சிகரமாக பேசிய ராகுல் காந்தி, மோடி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று, வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது; ஆனாலும்
இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது என்று மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் கூறினார்.

மோடி அரசு, மக்கள் மீது தங்கள் அதிகாரத்தை திணித்து வருவதாக கூறினார். பாகிஸ்தானுக்கே செல்லாத இந்திய முஸ்லீம்களை, இது உங்கள் நாடு இல்லை பாகிஸ்தானுக்கே திரும்பி செல்லுங்கள்; தமிழர்களிடம் அவர்களின் மொழியை மாற்றச் சொல்கிறது. வடகிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் உணவு பழக்கங்கள் பிடிக்கவில்லை; பெண்களை, ஆடைகளை ஒழுங்காக உடுத்திக் கொள்ளுங்கள் என்று மோடி அரசு கூறி வருவதாக ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.

டெல்லி காங்கிரஸ் மாநாட்டில், தமிழ் மொழி குறித்து ராகுல் காந்தி பேசியது பற்றி, அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது என்றார். 

தேமதுர தமிழோசை வந்து உலகமெங்கும் பரவ வேண்டும் என்று அண்ணாவும் சரி, ஜெயலலிதாவும் சரி அந்த அளவுக்கு தமிழை வளர்த்தார்கள். நான்காம் தமிழாம் அறிவுத் தமிழை வளர்த்தவர் ஜெயலலிதா. அதனால் தமிழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. தமிழ்மொழியானது உலகம் இருக்கும் வரை தழைத்தொங்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.