தேசிய கட்சிகளை தொடர்ந்து முக்கியமான மாநில கட்சிகளும் கூட்டணி விவகாரத்தில் தினகரனுடன் பேச கூட முன்வரவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை அ.தி.மு.க ஜெட் வேகத்தில் மேற்கொண்டு வருகிறது. தி.மு.க ஏறக்குறைய கூட்டணி விஷயங்களை முடித்துவிட்டு தற்போது வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தினகரன் தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் வரை காங்கிரசுடன் கூட்டணி என்று ஒரு நிலைப்பாட்டை தினகரன எடுத்திருந்தார்.

 

ஆனால் காங்கிரசோ தி.மு.கவுடன் கூட்டணியை இறுதி செய்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலை தி.மு.கவோடு இணைந்து சந்திப்போம் அதில் மாற்றம் இல்லை என்று ராகுல் தமிழக காங்கிரஸ் பெருந்தலைகளுக்கு திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் காங்கிரசுடன் கூட்டணி என்கிற தினகரனின் எண்ணம் கிட்டத்தட்ட காணல் நீராகிவிட்டது. அதே சமயம் மாநில கட்சிகளில் ஒன்று இரண்டை பிடித்துவிடலாம் என்று தினகரன் கருதிக் கொண்டிருந்தார்.

 

இதனை மனதில் வைத்து தான் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை, மாநில கட்சிகளுடன் கூட்டணி என்று நேற்று முன்தினம் தினகரன் கூறியிருந்தார். ஆனால் நேற்றோ மாநில கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றாலும் தனித்து 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க களம் இறங்கும் என்று அறிவித்துள்ளார் தினகரன். என்ன தான் 40 தொகுதிகளிலும் போட்டி என்று வீராப்பாக தினகரன் அறிவித்தாலும் இந்த விவகாரத்தில் அவர் விரக்தியில் இருப்பதாகவே சொல்கிறார்கள். 

ஏனென்றால் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பு துளியும் கிடையாது என்பது தினகரனுக்கு மட்டும் அல்ல அவரது கட்சியினருக்கும் தெரியும். எனவே கூட்டணி இல்லாமல் தனித்து என்று முடிவெடுத்தால் போட்டியிட வேட்பாளரை தேர்வு செய்யவே தினகரன் திணற வேண்டியிருக்கும் என்கிறார்கள். எனவே இந்த கூட்டணி விவகாரத்தால் தற்போதைய சூழலில் தனித்து விடப்பட்டு கிட்டத்தட்ட நட்டாற்றில் தவிக்கும் நிலையில் தான் தினகரன் உள்ளதாக சொல்கிறார்கள். 

பா.ம.க., கமல் கட்சி, சீமான் கட்சி என்று தினகரன் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து ஒரு மனக்கோட்டை கட்டியிருந்ததாகவும் ஆனால் அந்த கட்சிகள் எதுவுமே தினகரனுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கைவிரித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதற்கு காரணம் கூட்டணிக்கு தான் தான் தலைவர் என்கிற ரீதியில் தினகரன் பேசியது தான் என்றும் கூறப்படுகிறது.  

ஒரே ஒரு இடைத்தேர்தலில் வென்றுவிட்டு ஜெயலலிதா ரேஞ்சுக்கு தினகரன் கொடுத்த பில்டப் தான் அவரிடம் வேறு எந்த கட்சியும் நெருங்காததற்கு காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அரசியலில் எதுவும் நடக்கும் என்பதால் பொறுமையுடன் காத்திருப்போம், நல்லதே நடக்கும் என்று தினகரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.