ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி, அந்த மாநிலத்தில், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தும் நோக்கில்,  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதல்படியாக, ஆந்திராவில் இருந்த, 4,380 மதுக்கடைகள், 3,448 கடைகளாக குறைக்கப்பட்டன. 

மதுக்கடைகளை நடத்தி வந்த தனியார்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், அக்.,1 முதல், அனைத்து மதுக்கடைகளும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் நாராயணசாமி ஆந்திர முதலலமைச்சராக  ஜெகன் பதவியேற்ற பின், அனுமதி இல்லாமல் இயங்கிய 43 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து அக்டோபர்  1  ஆம் தேதி முதல் தனியார் வசம் இருந்த மதுக்கடைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முதலில், 10 மணி முதல் இரவு 9 மணி வரை மதுக்கடைகள் செயல்படும். 

பின்னர், காலை 11 மணி முதல் 7 மணி வரை என மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படும். 3,500 மேலாளர்கள் 8,000 விற்பனையாளர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள். இரவில் சட்டவிரோதமாக மதுவிற்பனையை தடுக்க இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள்.

மதுபான பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, ஓராண்டுக்குள் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும். தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெகன் அளித்த வாக்குறுதியின் படி, மது இல்லாத மாநிலமாக ஆந்திராவை மாற்றுவோம் என அவர் அதிரடியாக தெரிவித்தார்.