தமிழகத்தின் தேவைக்காக, ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். கர்நாடகா, நீர் வழங்குவதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவின் உத்தரவின்படி, இம்மாதம், 9.19 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை எனக் கூறி, கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

ஆனால், கர்நாடக அணைகளில், 22 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கூடிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து தண்ணீர் திறந்துவிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அங்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்பால் தற்போது மறுத்து வருகின்றனர்.

இதேபோல, தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., நீரை, சென்னைக்கு, ஆந்திர அரசு வழங்க வேண்டும். இந்தாண்டு, 2, டி.எம்.சி., நீரை மட்டுமே, ஆந்திர அரசு வழங்கியுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, மேலும், 2 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும்' என, பொதுப்பணித் துறை செயலர் பிரபாகர், நீர் வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயராமன் ஆகியோர், ஆந்திரா சென்று, அங்குள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.'

ஆனால் கண்டலேறு அணையில், போதுமான தண்ணீர் இல்லாததால், நீர் திறக்க முடியாது' என, ஆந்திர அதிகாரிகள் கூறி விட்டனர். தண்ணீர் திறந்துவிடும் விஷயத்தில், கர்நாடகா - ஆந்திர மாநில அரசுகள் கைவிரித்துள்ளதால், தமிழகத்தில், மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதால், அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.