மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 50 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி இருந்தது. சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார். இயற்கை பொய்த்துவிட்டது, பருவமழை போதிய அளவு பெய்யாததால் மிகுந்த வறட்சி ஏற்பட்டுள்ளது என்றும். எங்கெல்லாம் குடிநீர் பிரச்னைகளோ அங்கெல்லாம் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் தேவையான அளவு குடிநீர் வழங்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது என்றும் தெரிவித்தார். 

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்றும், ஒரு இடத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை தமிழகம் முழுவதும் இருப்பதுபோல் மாயை ஏற்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

இன்னும் 3 மாத காலத்திற்கு நிலத்தடி நீரை எடுத்துதான் தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது;குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது;குடிநீர் பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.