நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்கரியிடம் மாலி சமுதாயத்தை சேர்ந்த சிலர், தங்களது சமுதாயத்தினருக்க சட்டசபையில் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிலருக்கு, அவர்கள் செய்த பணிகள் அடிப்படையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. உடனடியாக, அவர்கள், தங்களது ஜாதியை முன்னே கொண்டு வருகின்றனர். ஜார்ஜ் பெர்ணான்டஸ், எந்த ஜாதியை சேர்ந்தவர்? அவர் எந்த ஜாதியையும் சேர்ந்தவர் அல்ல. அவர் கிறிஸ்துவர். ஜாதி காரணமாக, இந்திரா, பிரதமராக வரவில்லை. அசோக் கெலாட்டை மற்ற ஜாதியினரும் ஆதரித்ததால் தான் ராஜஸ்தான் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சொல்கின்றனர். இதனை நான் ஆதரிக்கிறேன். அதேநேரத்தில், அவர்களிடம் ஒன்றை கேட்கிறேன் இந்திரா, இட ஒதுக்கீட்டை பெற்றாரா? பல ஆண்டுகள் ஆட்சி செய்து, பிரபலம் ஆனார். வசுந்தரா ராஜே மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் எந்த இட ஒதுக்கீட்டை பெற்றனர்? என கேள்வி எழுப்பினர்.

சமுதாயத்தில், அடக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள். சமுதாய மற்றும் பொருளாதார ரீதியில்பின் தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
அதேநேரத்தில், இட ஒதுக்கீட்டால் மட்டும், ஒரு சமுதாயம் வளர்ச்சி பெறும் என சிலர் சொல்வது உண்மை அல்ல என தெரிவித்த நிதின் கட்கரி இட ஒதுக்கீட்டை தாண்டி சிந்திக்க  செய்ய வேண்டும் என தெரிவித்தார்.