no truth in panneerselvam statement said CM palanisamy

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்து ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணி தனியாக செயல்பட்டது. பின்னர் பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் பலகட்ட பேச்சுவார்த்தை மற்றும் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒன்றாக இணைந்தது.

இரு அணிகள் இணைவின் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி வந்தனர்.

அந்த குற்றச்சாட்டிற்கு எல்லாம் இதுவரை மறுப்பு தெரிவித்து வந்த பன்னீர்செல்வம், அவர் வாயாலேயே பிரதமர் மோடிதான் அணிகளை இணைத்து வைத்தார் என்பதை அண்மையில் ஒப்புக்கொண்டார்.

ஓபிஎஸ்-சின் இந்த பேச்சு அதிமுகவிற்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் கூறியது தொடர்பான விவரம் தெரியாது என சேலத்தில் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, பின்னர் கோவையில் இதுதொடர்பாக விளக்கமளித்தார்.

அப்போது, எனக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே எந்த பிரச்னையும் கிடையாது. இருவரும் இணைந்துதான் கட்சி வளர்ச்சி பணிகளில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். ஒரு சிறிய வார்த்தை பேசினால் கூட பெரிதாக்கப்படுகிறது. அப்படித்தான் ஓபிஎஸ் கூறியதும் பெரிதாக்கப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மோடியின் தலையீடு இல்லை. ஓபிஎஸ் கூறியதில் உண்மையில்லை என முதல்வர் தெரிவித்தார்.