பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் உறவை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், பாஜகவுடன் கைகோர்த்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடுவை ஆதரிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளதால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குடியரசு துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் அண்மையில் நடந்த கூட்டணி மாற்றத்தை தொடர்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமைச்சராக  பதவி வகித்து வருகிறார். துணை முதலமைச்சராக  பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில்குமார் மோடி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், பீகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி நடத்தி வரும் நிதிஷ்குமார் அங்கம் வகிக்கும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் குடியரசு துணை தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கையா நாயுடுவை ஆதரிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, ஐக்கிய ஜனதா தள கட்சியின் பொது செயலாளர் கே.சி.தியாகி  செய்தியாளர்களிடம் பேசும் போது, குடியரசு துணை தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கையாவை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்றும்,  எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்திக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த அதிரடி அறிவிப்பால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.