மகாராஷ்ட்ரா மாநிலத்தில் புதிய அரசு அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு தரப்போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். இதையடுத்து வேறு வழியில்லாமல் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற்றது. இதனால் இந்த கூட்டணி பிரச்சினை இன்றி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் இதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டது.
இரு கட்சிகளின் தொடர் பிடிவாதம் காரணமாக, தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் ஆன போதிலும் அங்கு இன்னும் புதிய அரசு அமையவில்லை. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது.
இந்த நிலையில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் நாக்பூர் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று மோகன் பகவத்தை அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பம் இருந்து வந்த நிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று மும்பையில் சரத்பவாரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த சரத்பவார், ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.
பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் 25 ஆண்டுகாலமாக கூட்டணி கட்சிகளாக உள்ளன. அவர்கள் கூடிய விரைவிலோ அல்லது பின்னரோ ஒன்று சேர்ந்து விடுவார்கள். எனவே அந்த கூட்டணிதான் ஆட்சி அமைக்க வேண்டும். புதிய அரசை அமைக்க விரைவில் அவர்கள் முன்வர வேண்டும். மாநிலத்தில் அரசியலமைப்பு குளறுபடிக்கு வழிவகுக்க கூடாது. எங்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லை என சரத்பவார் அதிரடியாக தெரிவித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை, சிவசேனா அமைச்சர்கள் 6 பேர் நேற்று திடீரென சந்தித்து பேசினர். அப்போது ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் நீடித்து வரும் இழுபறியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 7, 2019, 6:52 AM IST