விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி, தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் கடந்த இரண்டு நாட்களாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அல்லது நாளை  அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள  பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் மட்டுமே அதிமுகவுக்கு ஆதரவளிக்கிறோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளன. மற்ற கட்சிகள் இதுவரை மவுனம் காத்து வருகின்றன. பாஜக மத்திய தலைமையிடம் ஆலோசித்த பிறகு இடைத் தேர்தல் குறித்த தங்களது முடிவை அறிவிப்போம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இடைத் தேர்தலில் போட்டியிடத் தயார் எனவும், அதில் தனக்கு பயம் ஏதுமில்லை என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுகிறதா? இடைத் தேர்தலில் தனித்து களம் காண்கிறதா என்றெல்லாம் யூகங்கள் எழுந்தன.

இந்த நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பேசிதான் முடிவெடுக்க முடியும். இனி அதிமுகவினர் வந்து விஜயகாந்திடம் பேச வேண்டும். இதெல்லாம் இருக்கிறது. ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால், அதிமுகவினர் வந்து பேசிய பிறகுதான் எங்களுடைய முடிவை அறிவிக்க முடியும் என அதிரடியாக பதில் அளித்தார்.