குடியாத்தத்தில் தமிழரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ,  சட்டப்பேரவைத் தோதலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாலினின் இந்த அறிக்கை தமிழகத்தில் அரசியல்ரீதியான சாதிய மோதல்களுக்கு வித்திடும். விக்கிரவாண்டி இடைத் தோதலில் வன்னியா்களின் வாக்குகளைப் பெற ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்த ஒரு தொகுதியின் வெற்றி, தோல்வி தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் தெரியும்.
துணை முதல்வராக, அமைச்சராகச் செயல்பட்ட ஸ்டாலின், தற்போது வாக்கு வங்கிக்காக, விக்கிரவாண்டியில் வன்னியா்களின் வாக்குகளை கணிசமாகப் பெறவே ஜாதி அரசியலை முன் வைத்துள்ளார்.

இந்த அறிவிப்பு ஸ்டாலினின் அரசியல்   முதிர்ச்சியின்மையே காட்டுகிறது. பாஜக இந்தியாவை மதத்தால் பிரிக்கிறது; மதவாதத்தை வளா்க்கிறது எனக்கூறி வரும் ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக ஒரு ஜாதிக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது கண்டனத்துக்குரியது. 

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளும் இந்த கருத்தை ஆதரிக்கிறார்களா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று செ.கு.தமிழரசன் கண்டனம் தெரிவித்தார்.