17 ஆவது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இதில் மோடி, அமித்ஷா, ஸ்மிரிதி இரானி., நிதின் கட்கரி, ராஜ்நாத்  சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. அவர் 1996 ஆம் ஆண்டில் இருந்து வழக்கமாக போட்டியிடும் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அந்தத் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார். அத்வானிக்கு சீட் கொடுக்கப்படவில்லை என தெரிந்தததும் பாஜகவினரே அதிர்ச்சி அடைந்தனர். காங்கிரஸ் கட்சி கூட, மோடியும்,  அமித்ஷாவும் மூத்தவர்களை மதிப்பதில்லை என குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில் வரும் மே மாதம் குஜராத்தில் காலியாகும் மாநிலங்களவை சீட் அத்வானிக்கு தரப்படும் என தெரிகிறது. இந்த இடத்தில் தற்போது எம்.பி.,யாக இருப்பவர் அமித்ஷா
 
பாஜகவில்  78 வயதுக்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி கல்ராஜ் மிஸ்ரா, புவன் கந்துாரி போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். ‛‛உங்களுக்கு வயசாச்சு. போட்டியிட்டதெல்லாம் போதும். ஓய்வெடுங்க'' என்று அவர்களிடம் கட்சி கூறிவிட்டது.

இவர்களில் அத்வானிக்கு குஜராத்தில் காலியாகும் மாநிலங்களவை  இடம் தரப்பட உள்ளது. மக்களவை தேர்தலில் அமித்ஷா போட்டியிடுவதால், அவரது மாநிலங்களவை பதவி வரும் மே மாதம் காலியாகிறது. இந்த இடம் அத்வானிக்கு தரப்பட உள்ளது என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.