திருச்சியில் அனுமதியின்றி போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அனுமதி பெற்றிருப்பதால், அந்த கூட்டத்திற்கு தடையில்லை என திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பல தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், ரயில் மறியல், முற்றுகை போராட்டங்கள் என தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தினகரன் தலைமையில் அவரது ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் ஒன்றுகூடி திருச்சி விமான நிலையத்தை இன்று முற்றுகையிட்டனர். மிக பிரம்மாண்டமான இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் தினகரன் மற்றும் விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

இதன் எதிரொலியாக வரும் 18ம் தேதி வரை அனுமதியின்றி திருச்சியில் போராட்டங்களோ பொதுக்கூட்டமோ நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தடை விதித்துள்ளார். இதையடுத்து நாளை கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்துக்கும் தடை என்ற தகவல் பரவியது.

இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விளக்கமளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி பெற்றுவிட்டதால், அந்த பொதுக்கூட்டம் நடக்க தடையில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.