வங்கி அதிகாரிகள் மோசடியாளர்களுடன் கைகோர்க்கும் நிலையில் வங்கி மோசடியை தடுக்க ஆதார் கார்டு ஒரு தீர்வு கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் அரசியல் சாசன அமர்வு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. உச்சநீதி மன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடக்கிறது.  

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆதார் எண்ணை இணைப்பதால் பயங்கரவாதம் மற்றும் வங்கி மோசடியை தடுக்க முடியும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

]

இதற்கு பதிலளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள்  வங்கி அதிகாரிகள் மோசடியார்களுடன் கைகோர்த்து உள்ள நிலையில் எப்படி வங்கி மோசடியை தடுக்கும் என கேள்வியை எழுப்பினர்..

மோசடியாளர்களின் அடையாளம் தொடர்பாக எந்தஒரு சந்தேகமும் கிடையாது. யாருக்கு கடன் கொடுக்கிறோம் என்பது வங்கிக்கு தெரியும். வங்கி அதிகாரிகள் மோசடியாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். இதனை ஆதாரால் தடுக்க முடியுமா? என கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினர்

தொடர்ந்து பேசிய நீதிபதிகள் ஆதாரால் வங்கி மோசடி எல்லாம் தடுக்க முடியாது எனவும் ஆதாரை வைத்து  அரசு திட்டங்களில் பயனாளர்களை வேண்டும் என்றால் அடையாளம் காணலாம் எனவும் தெரிவித்தனர்.

சில பயங்கரவாதிகளை பிடிக்க நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க கூற முடியுமா? என்றும் பயங்கரவாதிகள் சிம் கார்டுக்காக விண்ணப்பம் செய்கிறார்களா? ஒரு சில பயங்கரவாதிகளை பிடிக்க 120  கோடி மக்களையும் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதில்தான் பிரச்சனை என்றும் நீதிபதிகள் கேள்வி கேட்டு வழக்கறிஞர்களை திணறடித்தனர்.