ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையைக் கருத்தில் கொண்டு முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா கொண்டு வந்ததுதான்  அம்மா உணவகம் திட்டம். இத்திட்டம் முதலில் சென்னையிலும் பின்னர் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. 

இட்லி ஒரு ரூபாய், பொங்கல் 3 ரூபாய், வெரைட்டி ரைஸ் 5 ரூபாய் என மிகக்குறைந்த விலையில் உணவுகள் இங்கு வழங்கப்பட்டதால் இந்திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 

ஆனால் மிகக் குறைந்த விலையில் கூலித் தொழிலாளர்களின் பசியாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் குறித்து தற்போது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அதாவது பயனாளர்கள் அம்மா உணவங்களுக்கு வந்து உணவுப் பொருட்களை பார்சல் என்ற பெயரில் மொத்தமாக வாங்கிச் சென்றுவிடுவதாகவும், இதனால் ஏழை, எளிய மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து அம்மா உணவகங்களில் எக்காரணம் கொண்டும் பயனாளிகளுக்கு உணவுகளை பார்சலில் வழங்கக் கூடாது என்று தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

ஒரு சில நாட்களில் சிலர் அதிகப்படியான உணவை பார்சல் வாங்கிச் செல்வதால், பசியோடு வரும் ஏழை மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படுவதாகவும், நம்பிக்கையோடு வரும் ஏழைகள் அதன்பிறகு செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்.

இந்த நிலையைத் தடுக்க இனி அம்மா உணவகங்களில் உணவை பார்சல் தரக் கூடாது என்று தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.