சிஏஏ நாட்டு மக்கள் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. மேலும், இந்த சட்டம் அண்டைநாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை தான் வழங்கும் என முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் சிக்கலுக்கு இடையே சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA,NPR,NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். அதேபோல், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கமாட்டோம் என மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்த நிலையில், திடீர் திருப்பமாக இந்த சட்டங்களை அவர் ஆதரித்துள்ளார். 3 மாதங்கள் ஆன நிலையில் முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவும் சந்தித்தனர். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பிரதமர் மோடியுடன் CAA, NPR, NRC உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன். சிஏஏ-வால் யாரும் பயப்பட வேண்டாம். குடியுரிமை திருத்தச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதில்லை. மாறாக அண்டை நாடுகளில் வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.