தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவின் எழுச்சி, பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது 4 பகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக தற்போது 48 பகுதிகளை கைப்பற்றியுள்ளது. வாக்கு சதவிகிதத்திலும் டி.ஆர்.எஸ் கட்சியை விட  1 சதவிகிதமே குறைவாக பெற்றிருந்தது. இது ஐதராபாத்தில் பாஜகவின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.  

இதுகுறித்து குஷ்பு வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. ஐதராபாத்தில் 2016-இல் வெறும் 4 இடங்களை பெற்ற பாஜக தற்போது 48 இடங்களை பெற்றுள்ளது, பாஜகவின் மிகப்பெரிய வளர்ச்சி. ஐதராபாத் தேர்தலில் பாஜகவின் இந்த எழுச்சி, பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 2021-ல் தமிழகத்திலும் பாருங்கள், யாராலும் நம்மை தடுக்க முடியாது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.