no one can isolate dinakaran said nanjil sampath

தினகரன் ஒரு தீப கம்பம்; அவரை வெட்டி விரகாக்க நினைத்தால் அது போதும் நடக்காது என தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவளித்துவரும் பாஜக, அவர்களை கழற்றிவிட்டு சசிகலா தரப்புடன் கைகோர்க்க திட்டமிடுவதாக தகவல்கள் பரவுகின்றன. அதேபோல, தினகரனை மட்டும் ஓரங்கட்டிவிட்டு சசிகலாவுடன் இணக்கமாக இருக்க ஆட்சியாளர்கள் முயல்கின்றனர் என்றும் பேசப்படுகிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், ஏதாவது ஒரு வகையில் தமிழகத்தில் காலூன்ற பாஜக முயல்கிறது. மக்களின் கோபத்தையும் சாபத்தையும் சம்பாதித்துள்ள பாஜகவிற்கு பட்டுப்பாவாடை விரித்து வரவேற்க பைந்தமிழ் நாட்டில் யாரும் தயாராக இல்லை. கோடிகளை கொள்ளையடித்த ஓபிஎஸ், இபிஎஸ் போன்றோரை அதை காரணம் காட்டி பாஜகவால் வளைக்க முடியுமே தவிர வேறு யாரையும் வளைக்க முடியாது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் பாஜக துடிப்பது புரிகிறது. அதனை அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் நாங்களும் திராவிடர்கள் தான் என்று சொல்லுகிற அளவுக்கு பசுத்தோல் போர்த்திய புலியாக மாற தயாராகிவிட்டார்கள்.

தினகரனை யாரும் தனிமைப்படுத்த நினைத்தால் அது நடக்காது. ஆர்.கே.நகரில் முதல் எதிரி, முக்கிய எதிரி, மூல எதிரி என 3 எதிரிகளையும் வீழ்த்தி வரலாற்று வெற்றியை தினகரன் பெற்றிருக்கிறார். தினகரன் தவிர்க்க முடியாத தலைவன். தமிழக இளைஞர்கள் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய தீப கம்பம். அதனை வெட்டி விரகாக்கலாம் என நினைத்தால் அது பலிக்காது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.