ஒரு மனிதராக இந்த சுயமரியாதைக்காரர் விட்டுச்சென்றிருக்கும் இடத்தை நிரப்புவது யாராலும் இயலாது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த ஒருவாரமாக உடல்நிலை மோசமடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. 

இதனையடுத்து, அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

 

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு தொடர்பாக எம்.பி.கனிமொழி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், சற்றும் சமரசம் செய்து கொள்ளாத பகுத்தறிவாளர். திராவிட இயக்கத்தின் ஆணிவேர். எளிமையின் முழு உருவம். எளியவர்களையும் மதிக்கும் பண்பு. ஆழ்ந்த அறிவும் சிந்தனையும் திடமான நம்பிக்கைகளும் தான் அவர். அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டு என்று புகழராம் சூட்டியுள்ளார். மேலும், ஒரு மனிதராக இந்த சுயமரியாதைக்காரர் விட்டுச்சென்றிருக்கும் இடத்தை நிரப்புவது இயலாது எனவும் பதிவிட்டுள்ளார்.