நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து செப்டம்பர் 8-ம் தேதி திருச்சியில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டனக் கூட்டம் நடைபெறும் என  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

நீட் விவகாரத்தில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது  தொடர்பாக தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

இந்த கூட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக கூறி பின்னர் மறுத்த மத்திய அரசைக் கண்டித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து செப்டம்பர் 8-ம் தேதி திருச்சியில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டனக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.  

மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

மத்திய மாநில அரசுக்கள் விழிப்படையும் வகையில் அடுத்தக்கட்ட போராட்டம் இருக்கும் என அவர் கூறினார். 

அனிதாவின் மரணத்தை திசை திருப்பும் முயற்சியில் கிருஷ்ணசாமி ஈடுபட்டிருக்கிறார் என்றும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.